#குறுங்கதை -1
ராமுக்கு மிகவும் பிடித்த உணவு பூரி தான். அதுவும் அந்த ஸ்ரீனிவாஸ் மெஸ்ஸில் போடும் பூரி என்றால் அவனுக்கு கொள்ளைப்பிரியம். 7 நாட்களில், 5 நாட்கள் அந்த கடையில் தான் பூரி தின்பான். அவனுக்கு அது சலித்ததே இல்லை. ஒவ்வொரு நாளும் புது புது கோமாளிகளை சந்திக்கும் வாய்ப்பு அங்கு கிடைத்ததால், பூரி இல்லை என்றாலும் அந்த கடையில் சாப்பிடுவான்.
அப்படி தான் ஒரு நாள் அவன் பூரி இல்லாமல் பொங்கல் தின்று கொண்டு இருந்த பொழுது எதிரே உட்கார்ந்து இருந்த நபர் இவனை பார்த்து சிரித்தார். இவனும் பதிலுக்கு சிரித்தான். பொதுவாக, பொது இடங்களில் யார் என்று தெரியாத நபர்கள் சிரித்தாலோ பேச்சு கொடுத்தாலோ சற்று சுதாரித்துக்கொள்வான்.
சாப்பாட்டில் அதிக கவனம் செலுத்தியதால் அவரின் புன்னகைக்கு பெரிதாக எதிர்வினை எதுவும் இல்லை. எதிர் வினை இல்லை என்பதை புரிந்து கொண்ட அவர், நமஸ்கராம் என்று நேரடியாக அவனை விழித்தார். நேரடியாக பேசியதால் அவனும் பதிலுக்கு வணக்கம் என்றான்.
'தினம் உங்களை நான் இங்க பாக்குறேன். உங்களுக்கு இந்த கடை அவ்வளவு பிடிக்குமா?' என்றார் அவர். அந்த கடையின் பூரி மீது கொண்ட காதலை கூறினான். ஆச்சிரியமாக கேட்டுக் கொண்டு இருந்த அவர் சட்டென்று 'நீங்கள் வெஜிடேரியனா?' என்று கேட்டார்.
'இங்க தான் பூரிக்கு கிழங்கு தொட்டு சாப்பிடுறேன். எங்க ஊருல பூரிக்கு சிக்கன் குழம்பு ஊத்தி ஒரு அடி அடிப்பேன். அந்த ருசியே தனி சார்' என்றான். இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சி போன போக்கை கவனித்தான். எதுவும் சொல்லாமல் சின்னதாக ஒரு சிரிப்புடன் விடை பெற்றார்.
பாடம்: வெஜிடேரியன் கடைக்கு வர எல்லாரும் வெஜிடேரியன் கிடையாது.
0 comments:
Post a Comment